ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி....2 பெண்கள் உட்பட 7 பேர் கைது!

இரயில்வேத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு போலியான பணி  நியமன ஆணையைக் கொடுத்து ஏமாற்றிய வழக்கில் 2 பெண்கள் உட்பட 7 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி....2 பெண்கள் உட்பட 7 பேர் கைது!

சென்னை, அன்னனூர், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருக்கு அறிமுகமான நபர்கள் சிலர் புருஷோத்தமனிடம் இரயில்வேத் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து 12 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் போலியான பணி நியமன ஆணையைக் கொடுத்து ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இது தொடர்பாக புருஷோத்தமன் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் புருஷோத்தமனிடம் இரயில்வேத் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி 12 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணையைக் கொடுத்து ஏமாற்றியது, அம்பத்தூரைச் சேர்ந்த பௌலின்மேரி (எ) ஜெயசீலி, கொளத்தூரைச் சேர்ந்த டில்லிபாபு  தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரிதிவிராஜ், மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரம், கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த ஸ்ரீஜா, சுரேந்திரன் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கனவாபீர் ஆகிய 7 பேர் என்பது தெரிய வந்தது.

அதனைதொடர்ந்து அவர்கள்  7 பேரையும் மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் குற்றவாளிகளிடமிருந்து போலி பணி நியமன ஆணைகள் மற்றும் மோசடி செயலுக்கு பயன்படுத்திய கணிணியின் வன்தட்டு ஆகியவையும் பறிமுதல் செய்தனர்.