"தலைவனுக்கு எவ்வளவு தில்லு".. போலீசுக்கே கொலை மிரட்டல்.. அப்பறம் என்ன ஆகும்.. தூக்கியாச்சி!!

சீர்காழியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.

"தலைவனுக்கு எவ்வளவு தில்லு".. போலீசுக்கே கொலை மிரட்டல்.. அப்பறம் என்ன ஆகும்.. தூக்கியாச்சி!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அர்ஜுனன்.  இவர் கடந்த 19 ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக புத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரை தொலைபேசியில் அழைத்துள்ளார்.

அப்பொழுது செந்தில் தான் ஒரு மிகப் பெரிய ரவுடி என்றும் தன்னை விசாரணைக்கு அழைத்தது தவறு என என்றும் எச்சரித்து தகாத வார்த்தைகளால் பேசி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்க்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்தார். இது தொடர்பான தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியது. 

இந்நிலையில் மேற்படி ரவுடி செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அர்ஜுனன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சீர்காழி போலீசார் தனிப்படை அமைத்து ரவுடி செந்திலை தேடிவந்தனர்.

இந்நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த செந்தில் சீர்காழியில் இருந்து தப்பிச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த போது போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்தது தகாத வார்த்தைகளால் பேசியது... கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.