சூடு பிடிக்கும் கோடநாடு வழக்கு விவகாரம்- புலன் விசாரணை துவக்கம்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் புலன் விசாரணை துவங்கியது. வழங்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டவர்களை விசாரிக்கும் முகாம் அலுவலகமாக உதகையில் உள்ள பழைய எஸ்பி அலுவலகம் மாற்றபட்டுள்ளது.

சூடு பிடிக்கும் கோடநாடு வழக்கு விவகாரம்- புலன் விசாரணை துவக்கம்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 13-ந் தேதிக்கு பின் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.  தமிழக அரசு சார்பாக நியமிக்கபட்டுள்ள சிறப்பு வழக்கறிஞர்களான சாஜகான் மற்றும் கனகரான் ஆகியோர் இந்த வழக்கில் பல்வேறு தகவல்கள் மறைக்கபட்டுள்ளதாகவும், முறையாக விசாரிக்கபடவில்லை என்று வழக்கை விசாரித்து வரும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தனர்.

அதனையடுத்து முக்கிய குற்றவாளியான சயான், விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்டோர்களிடம் மறு விசாரணை நடத்தபட்டது. இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் கூடுதல் விசாரணை செய்வதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக 5 தனிப்படைகள் நேற்று முன்தினம் அமைக்கப்பட்டன.

இந்த தனி படையினர் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கியவர்கள் என அனைவரிடமும் அடுத்தடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை விசாரிப்பதற்காக நீலகிரி மாவட்ட வனத்துறை அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்காலிக முகாம் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.