சென்னையில் மாயமான நபர்..! செங்கல்பட்டில் சடலமாக மீட்பு..!

சென்னை கே.கே.நகரை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் காணமால் போன நிலையில், செங்கல்பட்டில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையா இல்லை தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மாயமான நபர்..! செங்கல்பட்டில் சடலமாக மீட்பு..!

சென்னை கே. கே.நகர் விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி,இவர் அரும்பாக்கம் பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடையில் பணிபுரிந்து  கொண்டே கால் டாக்ஸி ஓட்டுநராக  இருந்து வந்தார். இவருக்கு என்ற ஐஸ்வர்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி ரவி வீட்டில் தனியாக  இருந்த போது மூன்று பேர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வருவதாக கூறி விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரவியின் மனைவியின் தகவலறிந்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவனை ஏன் அழைத்து வந்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் நாங்கள் யாரையும் அழைத்து வரவில்லை என கூறியுள்ளனர். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா தனது கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த 4 ஆம் தேதி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது வீட்டின் அருகே செம்பியம் காவல் நிலைய காவலரான செந்தில்குமார் அவரது காதலியுடன் வசித்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தனது மகள் செந்தில் குமார் வீட்டின் அருகே சிறுநீர் கழித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது தனது கணவர் ரவியை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தனது கணவர் காணமல் போன அந்த நாளே செந்தில்குமார் குடும்பத்துடன் வீட்டை காலி செய்து விட்டு சென்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தனது கணவரை செந்தில்குமார் கடத்தி சென்றிருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் காணவில்லை என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அதில் காவலர் செந்தில்குமார் வீட்டில் விசேஷம் என கூறி கடந்த 28 ஆம் தேதி முதல் பணிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கே.கே நகர் போலீசார் தனிப்படை அமைத்து காணாமல் போன இருவரது செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தியதில், ஈக்காட்டுதாங்கல், ராமாபுரம்  என காண்பித்து பின்னர் செல்போன் எண் ஸ்விட்ச் ஆகியிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக படாளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் அந்த சடலத்தை மீட்டுள்ளனர். இதனிடையே ரவியை கடந்த 1 ஆம் தேதி காவலர் செந்தில் குமாரின் காதலி கவிதா அடியாட்களுடன் வந்து தாக்கி கடத்தி சென்று, செங்கல்பட்டில் வைத்து எரித்து கொலை செய்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக காதலி கவிதா-வை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ரவியின் மனைவி ஐஸ்வர்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது கணவரின் முகத்தை பார்க்க வேண்டாம் என போலீசார் கூறுவதாகவும் , காவலருக்கு தொடர்பு இருப்பதால் தடயங்களை அழிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.