8 மாத ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற தாய் ... 6 பேர் மீது வழக்குப்பதிவு... 

தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக தாய் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

8 மாத ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற தாய் ... 6 பேர் மீது வழக்குப்பதிவு... 

தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக தாய் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 38). இவருக்கும், தூத்துக்குடி கொத்தனார் காலனியை சேர்ந்த ஜெபமலர் (28) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஜெபமலருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே, கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெபமலர் தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் தூத்துக்குடிக்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது வீட்டில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக ஜெபமலரிடம் கேட்டபோது மழுப்பலாக பதில் கூறியதாக தெரிகிறது.

இதனால் சந்தேகமடைந்த மணிகண்டன், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில், ஜெபமலர் தனது குழந்தையை விருதுநகரைச் சேர்ந்த புரோக்கர் ஜேசுதாஸ் என்பவர் மூலமாக தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல் ஆகியோருடன் சேர்ந்து ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக தெரியவந்தது. இதனால் மேலும் பேரதிர்ச்சியடைந்த  அவர்  குழந்தையை மீட்டுத்தரக் கோரி தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார், குழந்தையின் தாய் ஜெபமலர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், தனக்கு முதல் திருமணம் நடைபெற்று மனைவியை பிரிந்த நிலையில் தரகர்கள் மூலமாக எனக்கு 2வது மனைவியாக ஜெபமலரை திருமண செய்ததாக கூறிய அவர், அவரும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாக கூறினார். தன்னிடம் ஜாதியை மாற்றி ஜெபமலர் கூறியதாகவும், நள்ளிரவு நேரத்திலும் அவருக்கு செல்போன் அழைப்புகள் வந்ததால் தான் சந்தேகம் அடைந்ததாக குறிப்பிட்டார்.

இதற்கிடையே இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வசித்துவந்ததாகவும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்தபொழுது தான் வீட்டில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து மனைவியிடம் விசாரித்தபொழுது அவர் குழந்தையை 3 லட்ச ரூபாய்க்கு விற்றது தெரியவந்ததாக கூறினார்.

மேலும் இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். குழந்தையை மீட்ககாமல் ஊருக்கு செல்லமாட்டேன் என்றார்.