காதல் விவகாரத்தில் உயிரிழந்த இளைஞர்... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காதல் விவகாரத்தில் உயிரிழந்த இளைஞரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காதல் விவகாரத்தில் உயிரிழந்த இளைஞர்... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ்குமார். 27 வயதான இவர் கல்லூரியில் இளங்கலை பட்டம் முடித்து பெயின்டிங் காண்டிராக்டரான பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கலைக்கல்லூரியில் பயின்ற போது காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு முதல் இளம் பெண் சுரேஷ் குமாருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளதாகவும், அதனால் சுரேஷ் குமார் அடிக்கடி அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று வாக்கு வாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது அப்பெண்ணிற்கு தாழக்குடி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதனை தெரிந்த சுரேஷ் குமார். தாழக்குடி பகுதியில் சென்று அந்த வாலிபரிடம், காதல் விவகாரம் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த பெண் வீட்டினர் மற்றும் அப்பெண் கடந்த 6 ம் தேதி பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் சுரேஷ் குமாரிடம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் சுரேஷ் குமார் காட்டுப்புதூர் பகுதியில் உள்ள அப் பெண்ணின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள தென்னை தோப்பில் விஷம் அருந்தி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் எனவே சுரேஷ்குமாரின் மரணம் கொலையாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர் இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறியதைத் தொடர்ந்து, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் உடற்கூறு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. எனினும் சுரேஷ் குமாரிரின் சாவுக்கு காரணம் தெரியும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து போலீசாரும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனிடையே சுரேஷ் குமாரின் தாயார் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இளம் பெண்ணின் வீட்டினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இரு தரப்பினர் இடையையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.