போலீஸ் உதவியுடன் காதல் மனைவியை காரில் கடத்திய பெற்றோர்... மீட்டுத்தரக்கோரி கணவர் புகார்...

காரில் கடத்திச் செல்லப்பட்ட காதல் மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவன் பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார்.

போலீஸ் உதவியுடன் காதல் மனைவியை காரில் கடத்திய பெற்றோர்... மீட்டுத்தரக்கோரி கணவர் புகார்...

கோவை மாவட்டம் மதுக்கரை வழுக்கு பாறை பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தராஜ் (21) இவருக்கும் கேரளா மாநிலம் கொளுஞ்சாம் பாறை பகுதியைச் சேர்ந்த கணேஷ் - கலைவாணி தம்பதியினரின் மகளான காவ்யா 20 என்பவருக்கு கல்லூரி நண்பர்கள் மூலமாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் கடந்த 4 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். 

இதனையடுத்து அவர்கள் இருவரும் இரு வீட்டாருக்கும் தெரியாமல் கடந்த 4 மாதங்களுக்கு திருப்பூர் அனைப்பாளையத்தில் உள்ள ஒரு கோவில் வைத்து நண்பர்கள் உதவியுடன் இருவரும் மாலை மாற்றியும், தாலி கட்டியும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் வழக்கறிஞர் மூலம் காதல் திருமணத்தை பதிவு செய்து கொண்டதாகவும் தெரிய வருகிறது. இதனையடுத்து புதுமண தம்பதிகள் இருவரும் சூலூரில் தனி வீடு பார்த்து நண்பர்கள் உதவியுடன் வாடகை வீட்டில் குடியேறி கடந்த 4 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 

இதனிடையே அரவிந்த் ராஜ் தினமும் காலை வேலைக்கு இரவு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில் வீட்டில் தனியே இருந்த காவியாவிடம் வீட்டின் உரிமையாளர் எந்த ஊர், என்ன ஜாதி என்ற விவரங்களை தெரிந்து கொண்டு பெண்ணிடம் அவரது பெற்றோர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி அவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பெண்ணை காணவில்லை என தேடி வந்த பெண்ணின் வீட்டாருக்கு மகள் காதல் திருமணம் செய்து கொண்டு சூலூரில் தங்களது சமூகத்தை சேர்ந்தவரின் வீட்டில் தங்கியிருப்பதை அறிந்த பெண் வீட்டார் கடந்த 31ம் தேதியன்று பெண் காவியவை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

வேலை முடிந்து வீடு திரும்பிய கணவன் அங்கு காதல் மனைவியை காணாமல் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்ததில் பெண் வீட்டார் அழைத்து சென்றது தெரியவந்தது. இதனிடையே அரவிந்த் ராஜ் பெண் வீட்டாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனைவி குறித்து கேட்டப்போது ஆணவக்கொலை செய்து விடுவோம் என பெண் வீட்டார் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை சூலூர் காவல் நிலையத்தில் இருந்து பெண் வீட்டார் புகார் கொடுத்திருப்பதாகவும் காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படியும் அரவிந்த்ராஜிடம் போலீசார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து போலீஸ் விசாரணைகாக காவல்நிலையத்திற்கு தனது தாய் தந்தையுடன் சென்ற அரவிந்த் ராஜ் சென்றிருந்த நிலையில் அங்கு பெண் காவிய அவரது பெற்றோர் மற்றும் அடியாட்கள் என மூன்று கார்களில் வந்ததாகவும் போலீசார் நடத்திய விசாரணையின் போது அரவிந்த்ராஜை போலீசார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் காவியா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியதாகவும், அங்கிருந்த ஒரு காவலரின் உதவியோடு காவியாவை பெண் வீட்டார் தர தரவன இழுத்து சென்று காரில் ஏற்றிக்கொண்டு அடியாட்களுடன் கடத்தி சென்றுவிட்டதாகவும் இதுகுறித்து காவல் நிலையத்தில் போலிசாரிடம் நியாயம் கேட்டுள்ளார்.

அதற்கு அங்கிருந்த போலீசார் பெண் வீட்டார் மேல் ஜாதி என்றும் வசதி படைத்தவர்கள் என்றும் உன்னை ஆணவக்கொலை செய்ய கூட தயங்கமாட்டார்கள் என்றும் கூறி உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என கூறி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அரவிந்த் ராஜ் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100ஐ தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்தவற்றை கூறிய அரவிந்த் ராஜிடம் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அரவிந்த் ராஜ் தனது பெற்றோருடன் பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் காரில் கடத்தப்பட்ட தனது காதல் மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்றும் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.