சில்லறை கேட்பது போல் நடித்து நூதன முறையில் பணம் திருட்டு- கண்டுகொள்ளுமா காவல்துறை ?

கரூர் நகரில் பல்வேறு பகுதிகளில் வர்த்தகர்களிடம் சில்லறை கேட்பது போல் நடித்து நூதன முறையில் பணம் திருடும் கும்பல்,  குறித்து புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சில்லறை கேட்பது போல் நடித்து நூதன முறையில் பணம் திருட்டு- கண்டுகொள்ளுமா காவல்துறை ?

கரூர் நகரில் சின்னாண்டான்கோவில் சாலையில் கட்டுமான பணிகளுக்கு தேவையான டைல்ஸ், கிரானைட், மரக் கட்டைகள் விற்பனை செய்யும் கடைகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள வந்தனா மார்பிள்ஸ் என்ற கடைக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாலை 5 மணியளவில், தொழிலாளர்கள் சம்பளம் பிரிக்க வேண்டும் என கூறி இளைஞர்கள்  சில்லரை கேட்டு வந்துள்ளனர். 

அவர்கள் கூறியதை நம்பிய கடை உரிமையாளர் அவர்களிடமிருந்து 2000  ரூபாய் ஐந்து நோட்டுகள் பெற்றுக்கொண்டு அதற்கான சில்லரையாக, 500 ரூபாய் 20 நோட்டுகளை  கொடுத்துள்ளார்.

அதை பெற்றுக்கொண்ட அந்த இளைஞர்கள் எண்ணி பார்ப்பது போல் பார்த்துவிட்டு 500 ரூபாய் நோட்டுகள் 10 தாளை கையில் பின்புறம் மறைத்துவிட்டு மீதமுள்ள பத்து 500 ரூபாய் நோட்டுகளை திருப்பி கொடுத்துவிட்டு 100 ரூபாய் நோட்டுகளாக கொடுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பணத்தை வாங்கியதும் அதை எண்ணி பார்க்காமல் கல்லாவில் போட்ட கடை உரிமையாளர், 100 ரூபாய் நோட்டுகள் இல்லை என கூறிகிறார். அதற்கு அந்த இளைஞர்கள் சரி பரவாயில்லை 500 ரூபாய் நோட்டுகள் கொடுங்கள் என கூற 500 ரூபாய் நோட்டுகள் 20 நோட்டுகளை வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றனர். இதேபோன்று மற்றொரு முறையும் ஏமாற்றி விட்டு சென்றுள்ளனர் அந்த இளைஞர்கள். இந்நிலையில் இரவில் கல்லாவில் இருந்த பணத்தை கணக்கு பார்க்கும் போது 10,000 ரூபாய் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

பின்பு அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு சில்லரை கேட்டது போல் ஏமாற்றி பணத்தை திருடி சென்றது அந்த இளைஞர்கள் என்பது தெரியவந்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த கடைக்காரர் அக்கம், பக்கத்தில் உள்ள கடைக்காரர்களிடம் நடந்ததை சொல்லி இருக்கின்றார்.

அவர்களும் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததையடுத்து, அருகில் இருந்த கடைகளில் வைக்கப்பட்டிருந்த  கேமரா காட்சிகளை கடை உரிமையாளர்கள் சோதனை செய்துள்ளனர். அதில் 3 இரு சக்கர வாகனங்களில் ஆண்கள், பெண்கள் என 10 பேர் வந்திருப்பதும், அவர்கள் அப்பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளுக்கு சென்றிருப்பதும், இதே செயலில் ஈடுபட்டு பணத்தை ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என  குற்றம் சாட்டுகின்றனர். மேலும்,தாங்கள் பாதிக்கப்பட்டது எப்படி என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வாட்ஸ் அப்பில் மற்ற வணிகர்களிடம் பகிர்ந்து நான் ஏமாந்துவிட்டேன் மற்றவர் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.