12 வயது சிறுமியை கடத்திய உறவுக்கார பெண்! 24 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசார்!!

12 வயது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக உறவுக்காரப் பெண் மீது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசாரின் துரித நடவடிக்கையால் 12 வயது சிறுமி 24 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டுள்ளார்.

12 வயது சிறுமியை கடத்திய உறவுக்கார பெண்!  24 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசார்!!

சென்னை சின்ன நொளம்பூர் யூனியன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி. இவரின் 12 வயது மகள் நெற்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் புவனேஷ்வரி தனது மகள் நேற்று காலை முதல் காணாமல் போனதாகவும், மகளைத் தேடி விசாரித்தபோது தனது மைத்துனரான உதயன் என்பவரின் மனைவி கௌசல்யா அவரின் சொந்த ஊரான மதுரைக்கு தனது 12 வயது மகளை யாரிடமும் தகவல் சொல்லாமல் அழைத்துச் சென்றுவிட்டதாகவும், தனது மகளை மீட்டுத் தரும்படியும் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் கடத்தல் வழக்குப் பதிவு செய்த நொளம்பூர் போலீசார் கௌசல்யாவின் சித்தியான தேவி என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கௌசல்யா திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து கௌசல்யாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட நொளம்பூர் போலீசார் வழங்கிய அறிவுரைப்படி 12 வயது சிறுமியுடன் கௌசல்யா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆஜரானார். பின்னர் திருவெறும்பூர் போலீசார் அவ்விருவரும் காவல் நிலையத்தில் ஆஜரான தகவலை நொளம்பூர் போலீசாருக்கு தெரிவித்த நிலையில் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் கௌசல்யா மற்றும் 12 வயது சிறுமியை மீட்டு அழைத்துவர திருச்சி சென்றுள்ளனர்.

மேலும் கௌசல்யாவின் கணவர் உதயன் என்பவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.