இறந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சூறையாடிய  உறவினர்கள்...!கையும் களவுமாக பிடித்த போலீசார்...!! 

இறந்து போனவரின் வங்கிக் கணக்கில் இருந்து 30 லட்சம் ரூபாய் திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

இறந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சூறையாடிய  உறவினர்கள்...!கையும் களவுமாக பிடித்த போலீசார்...!! 

சென்னை அம்பத்தூர் பானுநகர் 13 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ். சென்னை மண்ணடி லிங்கு செட்டித் தெருவில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில், தனது மகன் ரமேஷ் பாபுவை டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்த்து நிர்வாகத்தை நடத்தி வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் பாபு-க்கு அரசு வேலை கிடைத்ததையடுத்து அவர் வேலைக்குச் சென்றுவிட, நிர்வாகம் நடத்த உதவியாக இருக்குமாறு சுப்புராஜ் தனது சகோதரரின் மகன்களான அரவிந்த் குமார் மற்றும் கோகுல் ஆகியோரை பணிக்கு சேர்த்துள்ளார்.

எதிர்பாராத விதமாக கடந்த 2017 ஆம் ஆண்டு சுப்புராஜ் திடீரென உயிரிழந்த நிலையில், சுப்புராஜின் மகன் ரமேஷ் பாபு டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தை கவனிக்கத் துவங்கினார். அப்போது  நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 30 லட்சத்து 40 ஆயிரத்து 817 ரூபாய் திருடுபோய் இருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து தனது சித்தப்பா மகன்களான அரவிந்த் குமார் மற்றும் கோகுலிடம் ரமேஷ் பாபு முறையிட்டார். அப்போது அவ்விருவரும் ரமேஷ் பாபுவிற்கு முறையான பதில் அளிக்காமல் தலைமறைவாகினர். 

இதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு ரமேஷ் பாபு வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பணம் திருடுபோனது தொடர்பாக புகார் அளித்தார். ஆனால், புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரமேஷ் பாபு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதனைத் தொடர்ந்து, ஜார்ஜ் டவுன் 7 வது குற்றவியல் நீதிமன்றம் இந்தவழக்கில் தலைமறைவானவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்யும் படி உத்தரவிட்டது. இதனையடுத்து வடக்கு கடற்கரை போலீசார் நம்பிக்கை மோசடி மற்றும் பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் அரவிந்த் குமார் மற்றும் கோகுல் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். 

இந்நிலையில் தலைமறைவாக இருந்த அரவிந்த் குமாரை கடந்த 5 ஆம் தேதியும், மற்றொரு தலைமறைவுக் குற்றவாளியான கோகுல் என்பவரை நேற்றும் போலீசார் கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.