நண்பர்களுக்கு இடையே தகராறு... ரவுடியை வெட்டி கொலை செய்த கும்பல்...

தேன்கனிகோட்டை அருகேயுள்ள மாரச்சந்திரம் கிராமத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரெளடி கெம்பன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நண்பர்களுக்கு இடையே தகராறு... ரவுடியை வெட்டி கொலை செய்த கும்பல்...

கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிகோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கெம்பன் (30) இவரது மனைவி மீனா, இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கெம்பன் நண்பர்களுடன் சேர்ந்து அடிதடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து  செய்து வந்துள்ளார்.

தக்கட்டி கிராமத்தை சேர்ந்த இவர் சிறு வயதிலிருந்து மாரச்சந்திரம் கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்ததால் அந்த கிராமத்தை சேர்ந்த மகேஷ் இவருக்கு நெருக்கமான நண்பரானார். கெம்பன் மற்றும் மகேஷ் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. கொலை மற்றும் கட்டப்பஞ்சாயத்து சம்பந்தமாக வசூலாகும் பணத்தை மகேஷ் சரியாக கெம்பனுக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இருவருக்குமிடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு மாரச்சந்திரம் கிராமத்தில் ஐயப்பன் சுவாமி சீட்டு ஏலம் நடந்துள்ளது. இந்த சீட்டு ஏலத்தை கெம்பன் எடுத்துள்ளார். அப்போது சீட்டு பணத்தை முழுவதுமாக கட்ட வேண்டும் என கூறிய கெம்பன், ஏற்கனவே நீ எனக்கு பணம் தராமல் ஏமாற்றினாய், இந்த ஏல சீட்டு பணத்தை எப்படி கட்ட போகிறாய் என மகேஷிடம் கூறியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகேஷ், தனது சகோதரர் ராமன் மற்றும் ராஜ்குமார், சிவா, முனிகிருஷ்ணன், ராஜு, பிரவீன் உள்ளிட்டோருடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கெம்பனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கெம்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கொலையாளிகள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து அறிந்த தேன்கனிகோட்டை டிஎஸ்பி கிருத்திகா, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி கொலை குறித்து விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து கொலை செய்யப்பட்ட கெம்பனின் உடலை மீட்ட போலீசார் பாதுகாப்பு காரணம் கருதி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை சம்பந்தமாக மகேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த தேன்கனிகோட்டை போலீசார் அவர்கள் அனைவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.