சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காப்பக காவலர்...! 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு...!

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காப்பக காவலர்...! 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு...!

ஈரோடு பகுதியில் தனியாா் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியுள்ள குழந்தைகள் பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனா். இந்த காப்பகத்தில் ஈரோடு மூலப்பாளையம், விவேகானந்தா் வீதியைச் சோ்ந்த பசுபதி (59) என்பவா் இரவுக் காவலராகவும் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தாா். இவா் அந்த காப்பகத்தில் தங்கியுள்ள 2 சிறுமிகளுக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

கடந்த 2019 ஆண்டு பள்ளி முடிந்து காப்பகத்துக்கு வந்த 12 வயது சிறுமியை பசுபதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும் இதை பற்றி யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனை அறிந்த காப்பகத்தில் பணியாற்றும் பெண் ஊழியா், பாதிக்கப்பட்ட சிறுமிகளுடன் கடந்த 2019 டிசம்பா் மாதத்தில் ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில் போலீசார் போக்சோ, கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பசுபதியை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் நடந்தது. அந்த விசாரணை முடிந்த நிலையில்,  சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்த குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு சிறுமியை  பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ஓா் ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.8,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அந்த அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டாா். 

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சமும், மற்றொரு சிறுமிக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.6 லட்ச நிவாரண தொகையை ஒரு மாத காலத்திற்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி மாலதி பரிந்துரைத்தாா். தண்டனை பெற்ற பசுபதியை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.