ஈரோட்டில் தொடர் கொள்ளை சம்பவங்கள் : வெளிமாநில தம்பதிகள் கைது !!

ஈரோட்டில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட தெலுங்கானாவை சேர்ந்த 3 தம்பதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. 

ஈரோட்டில் தொடர் கொள்ளை சம்பவங்கள் : வெளிமாநில தம்பதிகள் கைது !!

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பாக போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் ஈரோடு தாலுகா போலீசார் நேற்று ரங்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். 

விசாரணையில் அவர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால் போலீசாரின் கேள்விகளுக்கு அவர் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.  

விசாரணையில் அந்த வாலிபர் தெலுங்கானா மாநிலம் அனுமன் கொண்டவாரங்கல் பகுதியை சேர்ந்த விஜயகுமாரின் மகன் செட்டி சூர்யா (வயது 26) என்பதும், அவா் தனது மனைவி மற்றும் மேலும் 2 தம்பதிகளுடன் சேர்ந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சூர்யா, அவரது மனைவி பாரதி (24), தெலுங்கானா மாநிலம் காசிபுக்கர் பகுதியை சேர்ந்த தேவேந்திரனின் மகன் மணி (38), அவரது மனைவி மீனா (28), அதே பகுதியை சேர்ந்த விஜய் (38), அவரது மனைவி லட்சுமி (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகையும், ரூ.75 ஆயிரமும் மீட்கப்பட்டது.

இந்த 3 தம்பதிகளும் வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டி உள்ளனரா? அவர்கள் எவ்வாறு திட்டமிட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனர்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 தெலுங்கானா தம்பதிகள் பிடிபட்ட சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.