டாட்டா சுமோவில் மதுபாட்டில் கடத்தல் : போலீஸ் துரத்தியதும் தப்பியோடிய கும்பல் !!

ஆலங்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக டாட்டா சுமோ வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 430 மது பாட்டில்களை தனிப்படை போலீசார் துரத்தி சென்று பறிமுதல் செய்துள்ள நிலையில் போலீசாரை கண்டதும் வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

டாட்டா சுமோவில் மதுபாட்டில் கடத்தல் : போலீஸ் துரத்தியதும் தப்பியோடிய கும்பல் !!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அண்ணா நகர் பகுதியில் சட்டவிரோதமாக இரவு மற்றும் அதிகாலை வேலைகளில் மது விற்பனை பல இடங்களில் நடப்பதாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறை உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில் தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக ஆலங்குடி பகுதியில் இரவு நேர ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி அண்ணாநகர் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த ஒரு டாடா சுமோ வாகனத்தை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விரட்டி சென்றபோது சாலையின் ஓரத்தில் அந்த டாட்டா சுமோ வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து நபர்கள் தப்பி சென்றனர்.

இதனையடுத்து அந்த வாகனத்தை தனிப்படை போலீஸார் சோதனையிட்ட போது அதில் 430 மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கடத்தலுக்கு பயன்பட்ட டாடா சுமோ வாகனம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அவற்றை ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு தப்பியோடிய கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.