சொந்த வீட்டிலேயே நகையை திருடி நாடகமாடிய கணவன் : ஆன்லைன் சூதாட்ட மோகம் !!

சொந்த வீட்டில் மனைவியின் 17 சவரன் நகையைத் திருடி, கொள்ளை போனதாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் நகையை விற்ற பணத்தை செலவு செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சொந்த வீட்டிலேயே நகையை திருடி நாடகமாடிய கணவன் : ஆன்லைன் சூதாட்ட மோகம் !!

சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் துபாயில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்த அவருக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி மாலை அப்துல் ரஷீத் தனது மனைவியுடன் எழும்பூர் காவல் நிலையத்தில் தனது வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து மனைவியின் 17 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சி.சி.டி. வி காட்சிகளை ஆய்வு செய்ததில் அப்துல் ரஷீத் அவரது மனைவி வருவதற்கு முன் வீட்டிற்குள் சென்று வருவது பதிவாகியிருக்கவே, சந்தேகமடைந்து அவரை விசாரித்த போது, அப்துல் ரஷீதே தனது மனைவியின் நகையைத் திருடி விற்றுவிட்டு கொள்ளை நாடகம் ஆடியது அம்பலமானது.

மேலும், துபாயில் இருந்து வந்த பின் வேலைக்கு எதுவும் செல்லாமல், வீட்டில் வேலைக்குச் செல்வதுபோல் உணவைக் கட்டிக்கொண்டு மெரினாவிற்குச் சென்று பொழுதைப் போக்கிவிட்டு மாலை வீட்டுக்கு வந்து மனைவியை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.

மேலும், நண்பர்கள் பலர் புல்லட் வைத்திருந்ததால், தானும் புல்லட் வாங்க ஆசைப்பட்டு நகையைத் திருடியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த அப்துல் ரஷீத், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர் என்பதால் நகை விற்ற 2.50 லட்சம் பணத்தை ஆன்லைன் ரம்மியில் செலவு செய்து அழித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து சொந்த வீட்டில் நகையைத் திருடி கொள்ளை நாடகம் நடத்திய அப்துல் ரஷீத் மற்றும் அவருக்கு நகையை விற்று 2.50 லட்சம் பணம் பெற்றுக் கொடுத்த அவரது உறவினர் முகம்மது சாயி ஆகிய இருவரையும் எழும்பூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.