செல்போன் திருடிய டிரைவரை கடத்திய லாரி உரிமையாளர் மகன்... வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை...

பணம் மற்றும் செல்போன் திருடிய லாரி டிரைவரை கடத்தி வீட்டில் அடித்து உதைத்து சித்ரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் திருடிய டிரைவரை கடத்திய லாரி உரிமையாளர் மகன்...  வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் 52. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் குடியிருந்து கொண்டு சொந்தமாக லாரி வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இவரிடம் காரணம்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் 38. என்பவர் கடந்த சில நாட்களாக சிவக்குமாரிடம் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் லாரி டிரைவரான ராஜேந்திரன் லாரி அதிபர் சிவக்குமாரிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஒன்றையும் திருடிவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிவகுமாரின் மகன் அருண்குமார் மற்றும் இரு நண்பர்கள் உள்பட மூவரும் லாரி டிரைவர் ராஜேந்திரன் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த ராஜேந்திரனை தனது வீட்டிற்கு கடத்திச் சென்று அங்கு ஒரு அறையில் வைத்து கைகளையும் கட்டி வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இங்கிருந்து தப்பிய லாரி டிரைவர் ராஜேந்திரன் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். உடல் முழுக்க காயங்களுடன் இருந்த அவருக்கு அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் படுகாயமடைந்த ராஜேந்திரன் கொடுத்த வாக்குமூலத்தின் பெயரில் லாரி அதிபர் சிவகுமாரின் மகன் அருண்குமார் அவரது நண்பர்கள் குணசேகரன், சந்துரு ஆகிய மூவரையும் கைது செய்து பின்னர் அவர்களை திருப்பூர் கிளை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.