உத்ரகாண்ட்: 19 வயது இளம்பெண் கொலை வழக்கு..பாஜக தலைவர் மகனின் ரிசார்ட் இடிப்பு..!

கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி..!

உத்ரகாண்ட்: 19 வயது இளம்பெண் கொலை வழக்கு..பாஜக தலைவர் மகனின் ரிசார்ட் இடிப்பு..!

19 வயது இளம் பெண் கொலை:

உத்தரகாண்ட்டில் 19 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக தலைவரின் மகன் புல்கித் ஆர்யா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவின்படி, புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமான ரிசார்ட்டை அதிகாரிகள் இடித்து வருகின்றனர். 

போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை:

உத்தரகண்ட் மாநில பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா, ரிஷிகேஷில் ரிசார்ட் ஒன்றை வைத்துள்ளார். அங்கு பணிபுரிந்து வந்த 19 வயதான அங்கீதா பண்டாரி, கடந்த திங்கள் கிழமை மாயமானார். அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அங்கீதா கிடைக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

வாக்குமூலம்:

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், புல்கித் ஆர்யா மற்றும் ரிசார்ட்டில் பணியாற்றிய இரு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அங்கீதா பண்டாரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். 

ரிசார்ட்டை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்:

இதனை அறிந்த உள்ளூர்வாசிகள், கொலையாளிகளை அழைத்து வந்த காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கியதுடன், கைதான 3 பேரையும் கடுமையாக தாக்கினர். மேலும், புல்கித் ஆர்யாவின் ரிசார்ட்டையும் உள்ளூர்வாசிகள் அடித்து நொறுக்கினர். 

ரிசார்ட் இடிப்பு:

இதனிடையே, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமான ரிசார்ட்டை இடித்து தரைமட்டமாக்கவும் உத்தரவிட்டார். அதன்படி, பொக்லைன் இயந்திரம் மூலம் ரிசார்ட்டை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.