இனி உங்கள் மகள் பள்ளிக்கு வர வேண்டாம்..தேர்வு மட்டும் எழுதட்டும்.. ஆர்டர் போட்ட ஹெட் மாஸ்டர்.. மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி!!

கும்பகோணத்தில் பள்ளிக்கு வர வேண்டாம் என தலைமை ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த பிளஸ் 1 மாணவி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இனி உங்கள் மகள் பள்ளிக்கு வர வேண்டாம்..தேர்வு மட்டும் எழுதட்டும்.. ஆர்டர் போட்ட ஹெட் மாஸ்டர்.. மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி!!

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் இயங்கும் கோவிந்தசாமி நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார்.

குடும்ப வறுமை காரணமாக இம்மாணவி மாலை நேரங்களில் பகுதி நேர பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பக்கத்து வகுப்பில் உள்ள நண்பர்களோடு சேர்ந்து ரெக்கார்டு நோட்டு எழுதி உள்ளார். தேவையில்லாமல் அடுத்தடுத்த வகுப்புகளில் உட்கார்ந்து எழுதுவது தவறு என்றும் இது குறித்து மாணவியின் பெற்றோரிடம் பேச வேண்டும் என்றும் கூறிய தலைமை ஆசிரியர், மாணவியை வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி தனது தாய் சந்திராவை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது இனி உங்கள் மகள் பள்ளிக்கு வர வேண்டாம், அவரை பார்த்து, சக மாணவர்கள் கெட்டுப்போவார்கள்  என்பதால் அவர் தேர்வு மட்டும் எழுதட்டும் எனக்கூறிய தலைமை ஆசிரியர் பிரீத்தி, இனி வகுப்பில், பள்ளியில் ஒழுக்க கேடாக நடந்து கொள்ள மாட்டேன் என எழுதி வாங்கிக் கொண்டு அவரை வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மாணவியை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.