அம்மன் கழுத்திலேயே கை வைத்த நபர்  :  10 சவரன் தாலிச்செயினுடன் கைது !!

அம்மன் கழுத்திலேயே கை வைத்த நபர்  :  10 சவரன் தாலிச்செயினுடன் கைது !!

சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி எட்டாவது தெரு பகுதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலை அதே பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் என்ற பெண் நிர்வகித்து வருகிறார். தினமும் காலையில் கோவிலை திறந்து விட்டு பூஜைகள் செய்து இரவு கோவில் நடை சாத்துவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு 9 மணிக்கு பூஜைகளை முடித்து ராஜம்மாள் கோவிலை மூடிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி செயின் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து எம். கே.பி. நகர் குற்றப்பிரிவில் ராஜம்மாள் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எம். கே.பி. நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போது அந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்த கள்ளிகுப்பம் கங்கா நகர் கம்பர் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் என்கின்ற விக்கி என்ற நபர் அப்பகுதியில் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்த போது அம்மன் கழுத்தில் இருந்து செயின் திருடியதை ஒப்புக்கொண்டார்.

அவரிடம் இருந்து 10 சவரன் தாலிச்செயின் பறிமுதல் செய்யப்பட்டது. தன்னை கோவிலிலிருந்து வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரத்தில் திருடி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த எம். கே.பி. நகர் குற்றப்பிரிவு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.