போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கு: மேலும் ஒரு டிராவல்ஸ் ஏஜெண்ட் கைது..!

போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கு: மேலும் ஒரு டிராவல்ஸ் ஏஜெண்ட் கைது..!
Published on
Updated on
2 min read


சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒரு டிராவல்ஸ் ஏஜெண்டை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 150 போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்து கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 19 ஆம் தேதி சென்னை மண்டல  வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சார்பாக சென்னை  மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் பிரிவில் கொடுத்த புகாரில், முகமது ஷேக் இலியாஸ் என்பவர் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்திருப்பதாகவும், அதற்கு தேவையான உபகரணங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்ததில் ராயபுரத்தை சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.  அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயார் செய்யும் ஏஜெண்டுகளை பற்றி விசாரணை மேற்கொண்டு  திருவொற்றியூரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் ராயபுரத்தை சேர்ந்த முகமது புகாரி ஆகியோரை கடந்த 30ஆம் தேதி கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 
மேலும், விசாரணையில்  முகமது  புகாரியிடமிருந்து பாஸ்போர்ட்டுகள், பாஸ்போர்ட் தாள்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாடுகளின் போலியான ரப்பர் ஸ்டாம்புகள், அதை தயாரிக்கும் உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்டாம்ப் அடிக்கும் இயந்திரம், 2 செல்போன்கள் என மொத்தம் 160க்கும் மேற்பட்ட பொருட்களை கைப்பற்றினர்.

அதோடு, பாஸ்போர்ட் வாங்கி தரும் ஏஜெண்டுகளிடம் பழைய பாஸ்போர்ட்கள் மற்றும் விசா பேப்பர்களை வாங்கி அதன் உள்பக்க தாள்களை பிரித்து எடுத்து தகுதியில்லாத இந்திய மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு போலியாக பாஸ்போர்ட்கள் மற்றும் விசா ஸ்டாம்பிங் செய்து தந்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இவர்கள் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் தயாரித்து கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த நான்கு வருடமாக போலி பாஸ்போர்ட், விசாக்கள் தயாரித்ததும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்து விற்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில் போலி பாஸ்போர்ட் விற்பனை செய்த ஏஜெண்டுகளை பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், ஹைதரபாத்தை சேர்ந்த ஏஜெண்ட் அஹமது அலிகான்(42) என்பவர் போலி பாஸ்போர்ட் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தும் போது, மும்பை மற்றும் விசாகபட்டினத்தில் 8 வருடங்களாக அகமது அலிகான் விசா சர்வீஸ் மற்றும் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்ததும், வெளிநாட்டிற்கு செல்லக்கூடிய நபர்கள் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் வரும் போது, அவர்களது தகவல்களை அகமது அலிகான் சேகரித்து ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முகமது இலியாஸ் என்பவரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்து அதற்கான கமிஷன் தொகையை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. 

இதே போல அகமது அலிகான் சுமார் 150 போலி பாஸ்போர்ட்கள் மற்றும் விசா ஸ்டாம்பிங் செய்து கொடுத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட அகமது அலிகானை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

ஏஜெண்டுகள் மூலமாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களை அணுகி விசாக்களை பெறுமாறும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com