சிக்கிய ஏ.டி.எம் கொள்ளை கும்பலின் தலைவன்! போலீசார் அதிரடி

பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் கொள்ளை கும்பலின் இரு தலைவர்களுள் ஒருவனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிக்கிய ஏ.டி.எம் கொள்ளை கும்பலின் தலைவன்! போலீசார் அதிரடி

பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் கொள்ளை கும்பலின் இரு தலைவர்களுள் ஒருவனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் டெபாசிட் மிஷின்களில் நூதன முறையில் சுமார் 1 கோடி ரூபாய் வரை பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் வட மாநிலமான ஹரியானாவைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்த நிலையில், சி.சி.டி.வி காட்சிகள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தி.நகர் துணை ஆணையர் தலைமையில் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனையடுத்து துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் தலைமையிலான தனிப்படையினர் ஹரியானா சென்று ஹரியானாவில் உள்ள சிறப்பு அதிரடிப்படை போலீசாரின் உதவியுடன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி குற்றவாளிகளுள் ஒருவரான எம்.காம் பட்டதாரி அமீர் அர்ஷ் என்பவரையும் கடந்த ஜூன் 26 ஆம் தேதி வீரேந்தர் என்பவரையும் கைது செய்தனர். பின் அதன் தொடர்ச்சியாக ஹரியானாவில் ஜூன் 28 ஆம் தேதி தனிப்படையினரால் கொள்ளை கும்பலைச் சேர்ந்த நஜீம் ஹுசைன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் கொள்ளையடிக்க வந்த 4 கொள்ளையர்கள் குழுக்களில் இரு குழுக்களுக்கு தலைவனாக செயல்பட்ட சவுக்கத் அலி என்பவரை இன்று தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சவுக்கத் அலி 3 வதாக பிடிபட்ட நஜிம் ஹுசைனை உள்ளடக்கிய 2 குழுவினருக்கு தலைவனாக செயல்பட்டவன் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கைவரிசை காட்டியும் சிக்காத கொள்ளை கும்பலை தமிழக காவல்துறையினர் கொள்ளை நடந்த சில நாட்களில் கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.