பெரிய ஜேடி - பவானி.... ஜெயிலில் இருக்கும் போதே பகை .... கும்பலாக சேர்ந்து தீர்த்துக்கட்டிய கொடூரம்

பெரிய ஜேடி - பவானி.... ஜெயிலில் இருக்கும் போதே பகை .... கும்பலாக சேர்ந்து தீர்த்துக்கட்டிய கொடூரம்

சென்னை தாம்பரம் சானட்டோரியம் துர்க்கையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்தான் கருப்பு வடிவேல் என்கிற வடிவழகன்.  
தற்போது செனாய் நகர் பகுதியில் வசித்து வந்தவர், ஜூன் 15-ம் தேதியன்று சென்னை சேத்துப்பட்டு முத்தையப்பன் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார் வடிவழகன். 

அந்த வழியாக சென்ற வடிவழகனை திடீரென மர்மகும்பல் ஒன்று அவரை வழிமறித்தது. அரிவாளை எடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி வீசி விட்டு அந்த இடத்தை விட்டு ஒரு நொடி கூட தாமதிக்காமல் தப்பித்துச் சென்றனர்.

சற்று நேரத்தில் அந்த இடத்தில் மக்கள்கூட்டம் கூடியதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வடிவழகனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வடிவழகனின் உறவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் குறித்த தகவல்களை திரட்டி விசாரணையைத் தொடங்கினர். 

அப்போதுதான் வடிவேல் மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆராய்ந்து பார்த்ததில் வடிவழகனை கொன்றது யார் என்ற உண்மையும் போலீசாருக்கு தெரியவந்தது. 

2015-ம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் ஒரு கொலை நடந்திருந்தது. ரெயில்வே தண்டவாளத்தில் வைத்து, சைத்தான் என்கிற சுரேஷை, வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் ரஜினி, கடுகு, பட்டு என்கிற பார்த்திபன் மற்றும் ஸ்டீபன் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

ஆனால் சிறைக்குள்  இருந்தபோது, பட்டு என்கிற பார்த்திபனுக்கும், அவருடன் இருந்து வந்த பாம்பு வினோத் என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டிருந்தது. என்னிடமே உன் வேலையைக் காட்டுகிறாயா? உன்னை உயிரோடு விட மாட்டேன் என வினோத்தும், பார்த்திபனும் ஒருவரையொருவர் மிரட்டியிருக்கின்றனர். 

தற்போது இறந்து போன வடிவழகன், அன்றைய நேரத்தில் வினோத்துக்கு உதவிகள் செய்திருக்கிறார். குறிப்பாக, பார்த்திபனை நேரம் பார்த்து கொலை செய்து விடலாம் என ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார் வடிவழகன். இதனால் பார்த்திபன் கேங்கிற்கும், வடிவழகனுக்கும் பிரச்சினை ஏற்படத் தொடங்கியது. 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020-ம் ஆண்டு வடிவழகன் மற்றும் காராமணி என்கிற வினோத்குமார் ஆகிய இருவரும் வெவ்வேறு வழக்குகளுக்காக சிறைக்கு சென்றனர். அப்போது வடிவழகனை கண்டு கொண்ட காராமணி, இவர் பாம்பு வினோத்துக்கு எதிராக இருப்பவர், இவனைத்தான் கொலைசெய்வதென திட்டம் போட்டதை நினைவு கூர்ந்திருக்கிறார் காராமணி. 

அதைத் தொடர்ந்து சிறைக்குள்ளேயே இருவருக்குள்ளும் பிரச்சினைகள் ஏற்பட்டு, அடிதடியாகியிருக்கிறது. இதனால் காராமணி என்கிற வினோத்குமார் வடிவழகளை கொலை செய்து விடுவதாக அப்போதே கூறி, அதற்கான திட்டத்தையும்  சிறை நண்பர்களுடன் சிறைக்குள்ளேயே ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்.  

ஆனால் வடிவழகனும், அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர், இரு தரப்பினரும், ஒருவரை ஒருவர் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி அதற்கான முயற்சிகளையும் செய்து வந்துள்ளனர். 

சில மாதங்களுக்கு முன்பு வடிவழகன் – வினோத் இந்த இரு கும்பலுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனே தீர்த்து கட்ட வேண்டும் என்று ஆளாளுக்கு திமிரினர். அதைத் தொடர்ந்து காராமணியை பின்தொடர்ந்த வடிவழகன் மற்றும் அவரது கூட்டாளிகள் சமயம் பார்த்து போட்டுத் தள்ளுவதற்கு முயற்சி செய்தனர். 

ஆனால் நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்ட காராமணி வினோத்குமார் அந்த தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொண்டார்.  
தன்னை கொலை செய்யும் அளவுக்கு சென்ற வடிவழகனை இனிமேலும் உயிரோடு விட்டு வைத்தால் சரியாக இருக்காது என்று ஆத்திரத்தில் பொங்கிய காராமணி, அவரது நண்பர்களை அழைத்து ஸ்கெட்ச் போட்டார். 

வடிவழகனை எப்படியாவது போட்டுத் தள்ள வேண்டும். அவனது குறியில் நான் தப்பித்து விட்டேன். ஆனால் எனது குறியில் வடிவழகன் தப்பித்து விடக்கூடாது என்று திட்டம் போட்டார். அதன்படி, வெகு நாளாக வடிவழகனை அவனுக்கே தெரியாமல் பின்தொடர்ந்தனர். அப்போதுதான் கடந்த ஜூன் 15-ம் தேதியன்று வடிவழகன் தனியாக வருவதாக தகவல் கிடைத்தது. இதுதான் சரியான சமயம் என்று நினைத்த, காராமணி வினோத் மற்றும் கூட்டாளிகள் வடிவழகனை பின் தொடர்ந்தனர். 

யாரும் இல்லாத நேரம் பார்த்து, வடிவழகனை சுற்று போட்டவர்கள், கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். ஏற்கெனவே, முன்பொருமுறை சிறைக்குள் பாம்பு வினோத்துக்கும், பார்த்திபனுக்கும் இடையே சண்டை வந்தபோது, பாம்பு வினோத்துக்கு உதவி செய்வதற்காக தனது நண்பரான பார்த்திபனையே காட்டிக் கொடுத்திருக்கிறார் வடிவழகன். 
நண்பனையே காட்டிக் கொடுத்து துரோகம் செய்ததைப் போலவே, தற்போதும், அவருக்கு இன்னொருவர் துரோகம் இழைத்ததாக கூறப்படுகிறது. வடிவழகன் தனியாகத்தான் செல்கிறார், அவனை கொலை செய்வதற்கு இதுதான் சரியான சமயம் என்பதையே, அவனது கேங்கில் இருந்த ஒருவர்தான் காராமணி வினோத் கேங்குக்கு தகவல் கூறியிருக்கிறான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. 

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஸ்டீபன், மதுரவாயலைச் சேர்ந்த காரமணி என்கிற வினோத்குமார், சேத்துப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ரஜினி, அப்பு என்கிற அருள்முருகன் மற்றும் நமசிவாயப்புரத்தைச் சேர்ந்த சாய் மற்றும் நிர்மல் ஆகிய 7 பேர்தான் வடிவழகனை வெட்டி படுகொலை செய்தது சி.சி.டி.வி. காட்சிகளில் தெளிவாக பதிவாகியிருந்தன. 

 இரவோடு இரவாக தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் முதற்கட்டமாக வினோத்குமார், ரஜினி, அப்பு, ஸ்டீபன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த கேங் வால் மற்றும் நடந்து முடிந்த கொலை சம்பவம், சென்னை மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது.