பெங்களூரு நகரில் உள்ள பையப்பனஹள்ளி ரயில்நிலையத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் வந்து பிளாஸ்டிக் டப்பாவை வைத்து விட்டு ஓடி சென்றனர். டப்பாவில் வெடிகுண்டு ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் காவல்துறை ஆய்வு செய்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
தனித்து இருந்த அந்த ப்ளாஸ்டிக் டப்பாவில் 31 வயது முதல் 35 வயது வரை மதிப்புள்ள இளம் பெண்ணின் உடல் கொலை செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு காவல்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் வந்து பிளாஸ்டிக் டப்பாவை வைத்துவிட்டு சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பெண்ணின் அடையாளத்தை கண்டுபிடிக்கும் பணியிலும் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைபாதையில் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்ட பெண் உடல் பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைக்கபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் கிடைத்துள்ள பெண் சடலத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மாடியில் இருந்து விழுந்த ஏர் ஹோஸ்டெஸ்... கைதான காதலன்...