வயதோ 55...பார்வையோ கிடையாது... ஆனாலும் குரூப் 2 தேர்வில் வெற்றி...

தஞ்சையில் கண்பார்வையை இழந்த 55 வயதான முதியவர் குரூப் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது விடா முயற்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

வயதோ 55...பார்வையோ கிடையாது...  ஆனாலும் குரூப் 2 தேர்வில் வெற்றி...

"கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே" என்பது ஔவையார் வாக்கு. 

இதற்கு, பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது பொருளல்ல. நமக்கு ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்,  அதைத் தெரிந்தவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே உண்மையான பொருள். 

அந்த வகையில் 55 வயது முதியவர் ஒருவர், கண்பார்வையை இழந்த நிலையிலும், தன்னுடன்  100நாள் வேலை செய்பவர்களிடம் கேட்டு, கேட்டு, குரூப் 2 தேர்வு எழுதி தேர்சி பெற்றுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்...

மேலும் படிக்க | 75 வயதில் 64 வயது பெண்ணை கரம்பிடித்த முதியவர்...! கோலாகலமாக நடந்த திருமணம்...!

தஞ்சை மாவட்டம் மேல்உளூர் அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு பிறவியில் இருந்தே இரண்டு கணகளிலும் பார்வைத் தெரியாது. அப்படி இருந்தும், 1990-ம் ஆண்டு பூண்டி புஷ்பம் கல்லூரியில் BSC கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதன் பின்னர் இவரது படிப்பு சான்றிதழ்கள் தொலைந்து போக, மேற்கொண்டு படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

பெரு முயற்சிக்குப் பின்னர் தொலைந்து போன கல்வி சான்றிதழ்கள் கிடைத்ததையடுத்து, குரூப் 2 தேர்வு எழுதி அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது ரவிச்சந்திரனுக்கு. தனக்கு பார்வை கிடையாது, வயதாகிவிட்டது, இனி அரசு வேலையெல்லாம் கிடைக்காது என்று எதைப் பற்றியும் யோசிக்காமல், தனது எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தார் ரவிச்சந்திரன்.

மேலும் படிக்க | ”மருத்துவ வசதி இல்லாத 20 கிராமங்கள் - சிகிச்சையின்றி தவிக்கும் மக்கள்”

கண்பார்வை இழந்த ரவிச்சந்திரன் தற்போது, 100 நாள் வேலை செய்து வரும் நிலையில், தனது விருப்பத்தை 100 நாள் சக பணியாளர்களிடம் கூறவே,  அவர்களும் இவரை ஊக்குவித்து உற்சாகப்படுத்தியுள்ளனர். ரவிச்சந்திரனுடன் 100 நாள் வேலை செய்து வரும், பத்மாவதி என்ற 66 வயது மூதாட்டி, தான் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளதால், குரூப் 2 தேர்வுக்கான புத்தகங்களை ரவிச்சந்திரனுக்கு படித்து காண்பிக்கவும், கற்றுத்தரவும் தொடங்கியுள்ளார்.

100 நாள் வேலை நேரம் போக ஓய்வு நேரத்தில் மூதாட்டி பத்மாவதி கற்றுத்தர, முதியவர் ரவிச்சந்திரன், கேட்டுக் கேட்டு மனதில் இறுத்தி தயாராகி வந்தார். அண்மையில் நடைபெற்ற குரூப் 2  முதல் நிலைத் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார் ரவிச்சந்திரன். தன்னை ஒரு ரோல் மாடலாக வைத்துக் கொண்டு, மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயில வேண்டும்  என்றும் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை வழங்குகிறார். 

மேலும் படிக்க | நன்றி தெரிவித்த உக்ரைன் அதிபர்...!!!

கண்பார்வை  இல்லாத நிலையிலும், வயதான நிலையிலும், தன்னால் முடியாது என்று ஓரமாய் ஒதுங்கி விடாமல், தன்னம்பிக்கையுடன் ஜெலிக்கும் இந்த ரவிச்சந்திரன் மற்றும் பத்மாவதி இருவருமே நம்பிக்கை நட்சத்திரங்கள் என்றால் அது மிகையில்லை. 

குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள ரவிச்சந்திரனுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

மாலை முரசு செய்திகளுக்காக  தஞ்சை செய்தியாளர் அருள் ரூஸ்வெல்ட்... 

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வு அறையில் செல்போன் : தேர்வு எழுந்த வந்த நபரிடம் விசாரணை !!