நூதன நகை திருட்டில் ஈடுபட்ட வங்கி அதிகாரி...! போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்...!

நூதன நகை திருட்டில் ஈடுபட்ட வங்கி அதிகாரி...!  போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்...!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் தேசியமயமாக்கப்பட்ட எஸ் பி ஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கேத்தனூர், வாவிபாளையம், குள்ளம்பாளையம், இளவந்தி, அக்ராணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல்வேறு கிராமப்புற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேமிப்பு, நடப்பு கணக்குகளை துவங்கியும், நகை அடமான கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கி நகை மதிப்பீட்டாளராக பணியில் இருந்த திருப்பூரை சேர்ந்த சேகர் என்பவர் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகையை சிறு சிறு துண்டுகளாக வெட்டிநூதன திருட்டில் ஈடுபட்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த புகாரில் இது குறித்து வழக்கு பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் போலீசார் சேகரை கைது செய்தனர். அவரிடமிருந்து 144 சவரன் தங்க நகைகள் மற்றும் 19 லட்சம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்திருந்தனர். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பல மாதங்கள் ஆகியும் தாங்கள் இழந்த நகையோ அதற்கு ஈடாக பணமோ வழங்காத வருவாய் மற்றும் காவல்துறையினரை கண்டித்து இன்று தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வக்கீல் ஈசன் முருகசாமி தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வங்கி கிளை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். 

இந்தப் போராட்டத்தை அடுத்து போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதனுடைய இப்போராட்டம் குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வக்கீல் ஈசன் முருகசாமி கூறுகையில்,  கடந்த மார்ச் மாதம் இந்த வங்கியில் நடைபெற்ற இந்த மோசடி வழக்கில் ஒரு மாத காலத்திற்குள்ளாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வங்கி அதிகாரிகளால் உறுதி அளிக்கப்பட்டு ஏழு மாதங்களாகியும் இன்று வரை தீர்வு காணப்படவில்லை. எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க காவல்துறையினரும் வங்கி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனை வலியுறுத்தி சாகும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.