நிலக்கரி திட்டம் ரத்து...! பட்டாசு வெடித்து விவசாயிகள் கொண்டாட்டம்...!!

நிலக்கரி திட்டம் ரத்து...! பட்டாசு வெடித்து விவசாயிகள் கொண்டாட்டம்...!!

சேத்தியாதோப்பு உள்ளிட்ட 3  பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ததற்கு வரவேற்பு தெரிவித்து  புவனகிரியில் விவசாயிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

 கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு, தஞ்சை மாவட்டம் வடசேரி, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி  உள்ளிட்ட 3 இடங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஒப்பந்தத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். மேலும் பிரதமருக்கு கடிதமும் எழுதினார்.

இதையடுத்து இந்த நிலக்கரி  சுரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய  சுரங்கத்துறை  அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். இதைத்தொடர்ந்து புவனகிரியில் விவசாயிகள் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 

இதையடுத்து புவனகிரி கடைவீதியில் உள்ள வியாபாரிகளுக்கும், பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.