திருப்பத்தூரில் செறிவூட்டப்பட்ட அரிசி...! மாவட்ட ஆட்சியர் விளக்கம்...!!

திருப்பத்தூரில் செறிவூட்டப்பட்ட அரிசி...! மாவட்ட ஆட்சியர் விளக்கம்...!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில்  நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளின் விற்பனையாளர்களுக்கான செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகளை தெளிவுபடுத்திட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில், செறிவூட்டப்பட்ட அரிசியை குறித்து நியாய விலை விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்கிறது. இதில் உள்ள போலிக் அமிலம் பெண்களின் கரு வளர்ச்சிக்கும் ரத்தம் உற்பத்திக்கும் உதவுகிறது. இதில் உள்ள விட்டமின் பி12 ஆனது நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது எனத் தெரிவித்த அவர்.  இதனை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இரும்பு, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணூட்ட சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை சாதாரண அரிசியுடன் 100 கிலோவுக்கு ஒரு கிலோ வீதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி பொது விநியோகம் திட்டத்தின் மூலம் நியாய விலை கடைகள் வழியாக வழங்கப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகளை குறித்து நேரடியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தெளிவு படுத்திட வேண்டும் என்று பயிற்சி வகுப்பில் அனைத்து நியாய விலை விற்பனையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, முதல்நிலை மண்டல மேலாளர், இணை பதிவாளர்  குணம் ஐயப்பதுரை, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் முருகேசன் மற்றும் துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.