சேலம் மருத்துவமனையில் காலாவதியான உணவுகள்... ஆவின் பாலகத்திற்கு நோட்டீஸ்!!

சேலம் மருத்துவமனையில் காலாவதியான உணவுகள்... ஆவின் பாலகத்திற்கு நோட்டீஸ்!!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள ஆவின் பாலகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு உயர் சிகிச்சை பெறும் இடமாக விளங்கி வருகிறது.  தினமும் ஆயிரக்கணக்கான  புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்லும் இடமாகமும் இது விளங்கி வருகிறது.

இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்குள் இயங்கி வரும் ஆவின் பாலகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  இந்த ஆவின் பாலகத்தில் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 50 குளிர்பான பாட்டில்கள், 50க்கும் மேற்பட்ட பிரட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.  

மேலும் தேநீர், காபி உள்ளிட்டவைகளை தயாரிக்க ஃப்ரீசரில் முறையான பராமரிப்பின்றி பிளாஸ்டிக்கில்  வைக்கப்பட்டிருந்த 10 லிட்டருக்கும் மேலான பால் உள்ளிட்டவைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குழுவினர் பறிமுதல் செய்தனர்.   உணவு மாதிரிகள் பகுப்பாய்வுக்காக அனுப்பப்படவுள்ளது.  ஆய்வறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் இந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.  இந்தப் பொருட்களில் காலாவதி தேதி குறிப்பிடப்படாமலும், முறையான பராமரிப்பு இல்லாமலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆவின் பாலகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.  இந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை, சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  விஏஓ லூர்து பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்... மனைவி கோரிக்கை!!