கண்மாய்களில் குறைந்த நீர்மட்டம்... களமிறங்கிய விவசாயிகள்...

சிவகங்கை அருகே வைகை ஆற்றில் இருந்து, பாசன கண்மாய்க்கு தண்ணீரைத் திருப்பும் பணியில் விவசாயிகள் களமிறங்கினர்.

கண்மாய்களில் குறைந்த நீர்மட்டம்... களமிறங்கிய விவசாயிகள்...

மானாமதுரை | சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்களில் நீர்மட்டம் குறைந்ததையடுத்து விவசாயிகள் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மூலம் மானாமதுரை, திருப்புவனம் தாலுகாக்களைச் சேர்ந்த பொதுப்பணித்துறை கண்மாய்கள் 73ம் ஊராட்சி ஒன்றிய கண்மாய்கள் 195ம் உள்ளன. பொதுப்பணித்துறை கண்மாய்கள் பெரும்பாலும் வைகை ஆற்றுப்பாசனத்தை நம்பியே உள்ளன. இந்தாண்டு வைகை ஆற்றில் தொடர்ச்சியாக நீர்வரத்து காரணமாக சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.

இதனால் கண்மாய்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மானாமதுரை அருகே 800 ஏக்கர் பரப்பளவுள்ள மிளகனூர் கண்மாயை நம்பி சீனிமடை, கஞ்சிமடை, நாராயணதேவன்பட்டி, மிளகனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் படிக்க | ஜெகதீப் தன்கர் விவசாயிகளோடு நெருங்கிய தொடர்புடையவர் - பிரதமர் மோடி

தற்போது கண்மாயில் ஒரு மாதத்திற்கும் குறைவான தண்ணீரே இருப்பு இருப்பதால் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல கிராம விவசாயிகளே களமிறங்கினர்.

கால்வாய் மேடாக இருப்பதால் குறைந்த அளவு தண்ணீரே கால்வாயில் சென்றது. எனவே விவசாயிகள் இணைந்து மணல் மூட்டைகளை அடுக்கிதண்ணீரை திசை திருப்பி கால்வாய் நிறைய தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.

காலை முதல் மாலை வரை 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் விவசாயிகள் இணைந்து கால்வாய் நிரம்ப தண்ணீரை கொண்டு செல்கின்றனர். வைகை ஆற்றில் மழை காரணமாக நீர்வரத்து உள்ளது. தற்போது தண்ணீர் செல்லும் வேகத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கு சென்றால் கண்மாய் நிரம்பி விவசாயம் முழுமையடையும்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகளே இணைந்து வைகை ஆற்றில் அணை கட்டி தண்ணீரை கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு...விவசாயிகள் வேதனை..!