தனியார் காகித ஆலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு...! முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்கள்...!

தனியார் காகித ஆலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு...!  முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்கள்...!

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூகலூர் தண்ணீர்பந்தல்புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காகித ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், ஆலைக்கு பின்னால் தேக்கி வைக்கப்பட்டு இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் திறந்து விடப்படுகிறது. அதனால் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், விளைநிலங்கள் மாசு அடைந்துள்ளதாக கடந்த  2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதி பொதுமக்கள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்க்கு புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் அந்த இடங்களை ஆய்வு செய்து, காகித ஆலைக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

இந்த நிலையில் காகித ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்ப்படுவதாக தண்ணீர்பந்தல்புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி காகித ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்படுவதை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கையில் கருகிய தென்னை ஓலை மற்றும் கரும்பு பயிர்களுடன் காகித ஆலையை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள காகித ஆலைக்கு மின் இணைப்பு வழங்க கூடாது என கூகலூர் மின் பொறியாளர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். இது குறித்து சம்பவ  இடத்திற்க்கு சென்ற கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.