பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!!!பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!!!பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்...

சென்னை திருநின்றவூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளை பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட பள்ளி நிர்வாகியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


ஆவடியை அடுத்து திருநின்றவூர், லக்ஷ்மிபுரம் பகுதியில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல் நிலை பள்ளி இயங்கி வருகிறது.இங்கு 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.தனியார் பள்ளியின் தாளாளர் சிந்தை ஜெயராமன் மகனும், பள்ளி நிர்வாகியுமான வினோத், பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம், கவுன்சிலிங் என்ற பெயரில் தனியாக தனி அறைக்கு அழைத்துச் சென்று, மிரட்டி பல மணி நேரம் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.மேலும், வினோத் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளிடமும் அத்து மீறளில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, நேற்று மாலை இச்சம்பவத்தை வெளியே கொண்டுவர, +2 வகுப்பு மாணவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து கைகலப்பில் ஈடுபடுவது போல் நாடகம் ஆடினர். பள்ளி நிர்வாகம் மாணவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இதை தொடர்ந்து, இன்று காலை 9:00 மணியளவில், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஜெயராமனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிலையில் மற்றொரு பிரிவு மாணவர்கள் வினோத்தை கைது செய்ய சொல்லி, கோஷங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் இரு தரப்பினரிடமும் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.அதன் பிறகு மாணவர்கள் சென்னை - திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.போலீசார் மாணவர்கள் வெளியே செல்லாதவறு பள்ளியின் வாயிலை அடைத்தனர்.

மாணவர்கள் பள்ளியின் மற்றொரு வாயில் வழியாக சாலைக்கு செல்ல முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்திய முயற்சியில்  தள்ளு முள்ளு  ஏற்பட்டது. அப்போது தொடர்ந்து சாலையில் போராட்டத்திற்கு ஈடுபட முயன்ற போது போலீசார் சில மாணவர்களை தாக்கி உள்ளனர்.நீண்ட முயற்சிக்குப் பின் போலீசார் நடத்திய சமாதான பேச்சு வார்த்தையில் மாணவர்கள் உடன்பட்டு வகுப்பறைக்கு சென்றனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மேலும் தெரிந்து கொள்ள | தொடங்கியது அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா...! வெற்றி பெறுபவர்களுக்கு சூப்பர் பரிசு...!

ஏஞ்சல் பள்ளி நிர்வாகி வினோத் கடந்த சில நாட்களாக தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பள்ளி முதல்வர் சிந்தை ஜெயராமனை காவல் துறையினர் அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.. 
இதுகுறித்து பேசிய பெற்றோர்கள், இதுவரை நிறைய மாணவிகளை கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி அழைத்து செல்வதாகவும், அந்த அறையில் கண்கானிப்பு கேமரா ஏதும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட வினோத்தை கைது செய்யும் வரை மாணவர்களுடன் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்..இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருநின்றவூர் போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.