கொத்தடிமை போல் நடத்தும் நகராட்சி நிர்வாகம்...! துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியல்...!!

கொத்தடிமை போல் நடத்தும் நகராட்சி நிர்வாகம்...! துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியல்...!!

சங்கரன்கோவிலில் தனியார் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரியும் அதிகாரிகள் தங்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதை அரசு தடுக்க கோரியும் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்த பணியாளர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியம் முறையாக வழங்கப்படாமல் மிகவும் காலதாமதமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.  

மேலும் அரசு நிர்ணயித்த ஊதியம் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் பிற மாவட்டங்கள் மற்றும் ஊர்களில் மாதம் ஒன்றுக்கு சுமார் 15,000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும் போது சங்கரன்கோவில் நகராட்சியில் மட்டும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மாத ஊதியமாக 9,000 ரூபாய் மட்டும் வழங்கபடுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இதனை கண்டித்து சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தித்த அவர்கள், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தங்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்திலிருந்து 20 முதல் 40 சதவீதம் வரை கமிஷன் செல்வதாக கூறப்படுவதாகவும் கூறினர். மேலும், பணியாளர்களுக்கு அரசு நிர்ணயிக்கக்கூடிய ஊதியமானது முறைப்படி வருவதில்லை குற்றம் சாட்டினர். 

இதனோடு மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களை தரக்குறைவாக ஒரு கொத்தடிமை போல் நடத்துவதாகவும் தங்களை மிகவும் அவதூறாக பேசுவதாகவும் இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும், நகரில் பல்வேறு தேநீர் கடைகளில் தாங்கள்  சென்று தேநீர் அருந்தினால் கூட தங்களுக்கென ஒருமுறை பயன்படுத்தக்கூடிய குவளையில் மட்டுமே வழங்கப்படுவதாகவும் இது தங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் வாரம் ஒரு முறை தங்களுக்கு விடுப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குப்பைகளை அள்ளிச் செல்லும் தங்களுக்கு உரிய குப்பைகளை கொட்டுவதற்குரிய பகுதிகள் இல்லை எனவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி எனவும் கோரிக்கை வைத்தனர்.

 சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அதில் உடன்பாடு ஏற்படாமல் அவர்கள் சங்கரன்கோவில் திருவேங்கடம் மெயின் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திடீரென பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உத்திரவாதம் அளித்தபின் போராட்டத்தை கைவிட்டு  அவர்கள் கலைந்து சென்றனர்.