வடிவாசலை முற்றுகையிட்டு போராட்டம்...! போலீசார் தடியடி...!!

வடிவாசலை முற்றுகையிட்டு போராட்டம்...! போலீசார் தடியடி...!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் போது உள்ளூர் மக்கள் வடிவாசலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.

திருச்சி தெற்கு காட்டூர் சார்பில் மாநகராட்சி 39 வது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் பாலாஜி நகர் விரிவாக்க பகுதியியில் இன்று காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த விழாவிற்கு லால்குடி ஆர்டிஒ வைத்தியநாதன் தலைமை வகித்து, ஜல்லிகட்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 750 மாடுகளும் 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் 180 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு விழாவில் உள்ளூர் காளைகளுக்கு அனுமதி வழங்காமல் வெளியூர்  ஜல்லிகட்டு காளைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. 

அதனால் தங்கள் பகுதியில் மாடுகள் வரக்கூடாது என வெளியூரில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை மறித்து உள்ளூர்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமரசம் செய்து வைக்க முற்பட்டிருந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடைபெற இருந்த வாடிவாசல் பகுதியை அதிரடியாக முற்றுகையிட்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார்  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடிதனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.