திருப்பூர்: விவேகானந்தா சேவலயத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு.. அறிக்கை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவு..!

மாவட்ட ஆட்சியர் மருத்துவர்களிடம் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்..!

திருப்பூர்: விவேகானந்தா சேவலயத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு.. அறிக்கை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவு..!

விவேகானந்தா சேவாலயம்:

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில், தாய்- தந்தையை இழந்த 20க்கு மேற்பட்ட சிறார்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

3 சிறார்கள் உயிரிழப்பு: 

நேற்று காலை இவர்களுக்கு ரசம் சாதம் வழங்கப்பட்டுள்ளது.  இதனை சாப்பிட்ட 15க்கு மேற்பட்ட சிறார்கள் வாந்தி, காய்ச்சல், மயக்கத்தால் அவதிப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு வந்த அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 3 சிறுவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். 

தனித்தனியாக விசாரணை:

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே சமூக நலத்துறை ஏற்படுத்திய தனிக்குழுவும் பாதிக்கப்பட்ட சிறார்களிடம் தனித்தனியாக விவரங்களை கேட்டறிந்துள்ளது. 

மாவட்ட ஆட்சியர் விசாரணை:

உணவு மாதிரிகளையும் அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச்சென்றுள்ளனர். கெட்டுபோன உணவை சாப்பிட்டதால் குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டதா? என்ற தகவல் இன்னும் உறுதியாகாத நிலையில், காப்பகம் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் வினீத் சம்பவம் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு:

இதனிடையே இந்த விவகாரத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.