தாமிரபரணி கரையோரத்தில் எடுக்கப்படும் மணல்...! எங்கு கொண்டு செல்லப்படுகிறது...?

தாமிரபரணி கரையோரத்தில் எடுக்கப்படும் மணல்...! எங்கு கொண்டு செல்லப்படுகிறது...?

சாத்தான்குளம் அருகே ஆழ்வார்தோப்பு பகுதியில் தாமிரபரணி கரையோரத்தில் பள்ளம் தோண்டி எடுக்கப்படும் மணல் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ், திருச்செந்தூர் பாளையங்கோட்டை, கோபாலசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடியில் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின்படி திருச்செந்தூரில் இருந்து விஎம் சத்திரம் வழியாக பாளையங்கோட்டை வரை 50.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.435 கோடி மதிப்பிட்டிலும், கோபாலசமுத்திரம் முதல் கல்லிடைக்குறிச்சி வரை ரூ.202 கோடி மதிப்பிட்டிலும் இந்த மாநில நெடுஞ்சாலை அமைகிறது.

தற்போதுள்ள சாலை 7 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கிறது. இப்போது அமைக்கப்படும் சாலை 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே உள்ள சாலையில் இருக்கும் வளைவுகள் நேர் செய்யப் பட்டு புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தொழில் வழிச் சாலை என்பதால் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வளைவான சாலைகள் நேர்வழி சாலைகளாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தற்போது திருச்செந்தூரிலிருந்து ஆழ்வார் திருநகரி வரையிலும் பாளையங்கோட்டையில் இருந்து கருங்குளம் வரையிலும் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்திற்கு ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்யும் தொல்லியல் துறையினர் அனுமதி அளிக்காத காரணத்தினால் ஆழ்வார் திருநகரியில் இருந்து

ஆழ்வார்தோப்பு, ஸ்ரீவைகுண்டம் வழியாக கருங்குளம் வரை உள்ள சாலை புதிதாக போடப்பட்டு வருகிறது.

இதற்காக வழியோரங்களில் உள்ள விலை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆழ்வார் தோப்பில் திட்டமிட்டபடி சாலை பணி அமைக்கப்படாமல் நேர் வழி சாலை என்ற நோக்கம் நிறைவேறாத வகையில் புதிய வழித்தடத்தில் சாலை அமைக்கப்படுவதால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் புளிய மரங்கள் மற்றும் பனை மரங்களை வெட்டி வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆழ்வார்தோப்பில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை அமைக்கப்பட்டு வரும் சாலையின் இரு கரையோரங்களிலும் பள்ளம் தோண்டி அதில் இருந்து மண்ணை எடுத்து சாலையை உயரமாக அமைத்து வருகின்றனர். இப்பகுதி தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள நிலையில் பள்ளம் தோண்டி மண் எடுப்பதால் மழைக்காலங்களில் சாலைக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சாலையின் இருபுறமும் உள்ள பள்ளத்தால் சமீபத்தில் டாட்டா மேஜிக் வேன் ஒன்று நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்ததில் ஓட்டுநர் படுகாயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சாலை பணியில் ஈடுபடும் நிலையில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் பள்ளம் தோண்டி எடுக்கும் மணல் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.