காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. அணை ஏற்கனவே தனது முழுகொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. முன்னதாக அணைக்கு வரும் நீர்வரத்தானது காலை வினாடிக்கு 55000 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரம் கன அடிவரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் உபரி நீராக வெளியேற்றப்படவுள்ளதால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியர்களுக்கும் மேட்டூர் நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.