மக்களுக்கு விலையில்லா கொசுவலை
பருவமழை காலம் தொடங்கியதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் திரு. வி. க. நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா கொசுவலைகளை வழங்கினர்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்கள் சந்திப்பு
திரு. வி. க. நகர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு கொசு வலைகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தற்பொழுது இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கொசுவலைகள் சென்னை மாநகராட்சியிடம் தயாராக உள்ளது.
ஒவ்வொரு பகுதியாக கொசுவலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். முதல் கட்டமாக சாலை ஓரத்தில் வசித்து வரும் மக்களுக்கும், நீர்நிலைப் பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கும் கொசு வலைகள் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
துரிதமாக பணியாற்றி வரும் மாநகராட்சி
கடந்த பத்து நாட்களாக சென்னையில் தொடர் மழை பெய்து வந்தாலும் மாநகராட்சி பணியாளர்கள் துரிதமாக பணியாற்றி வருகின்றார்கள். இதனால் எந்த பகுதியிலும் மழை நீர் தேக்கம் இல்லாத சூழலே நிலவுகிறது. அதோடு சாலையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 15,000 பேருக்கு மாநகராட்சி சார்பில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள்
மழைநீர் வடிகால் பணியினால் சேதம் அடைந்துள்ள சாலைகளுக்கு பேட்ச் வொர்க் ( patch work) அமைக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது.மழைக்காலம் முடிந்த பிறகு முழுமையாக முறையான சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும்.
சென்ற ஆண்டு பருவமழையின் போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர், கழிவுநீர் தேங்கி இருந்தது, ஆனால் இந்த ஆண்டு எந்த பகுதியிலும் மழைநீர் தேங்கவில்லை. சென்னை மாநகராட்சி உடனினைந்து குடிநீர் வாரியம், மின்சாரத்துறை என்று அனைத்து துறையும் ஒருங்கிணைந்து பருவமழை காலத்தில் போர்க்கால அடிப்படையில் செயலாற்றி வருகிறோம்.