நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது...

67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். 

நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது...

2019ம் ஆண்டுக்கான 67 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில்  நடைபெற்றது. இதில் துணை குடியரசு தலைவர்  வெங்கைய்யா நாயுடு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். விழாவில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறந்த தமிழ் படத்திற்கான விருது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை  தயாரிப்பாளர் கலைபுலி தாணு பெற்றுக்கொண்டார். இந்த படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றார். இது இவர் பெறும் இரண்டாவது தேசிய விருது ஆகும்.  

சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. விஸ்வாசம் படத்திற்கு இசை அமைத்த டி.இமானுக்கு, சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. பார்த்திபன் இயக்கிய ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன. சிறப்பு திரைப்படத்துக்கான விருதினை நடிகர் பார்த்திபனும், அப்படத்தின் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதினை ரசூல் பூக்குட்டியும் பெற்றுக்கொண்டனர். சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கருப்புதுரை படத்தில் நடித்த நாகவிஷாலுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அவரே அதனை  குடியரசு துணை தலைவர் கையால் பெற்றுக்கொண்டார்.