சினிமாவில் புரட்சி வசனம் பேசும் நடிகர்கள் - நிஜத்தில் பேசிய விஜய் சேதுபதி!!

பள்ளிகளில் சாதி பிரிவினையால், சில மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்க இயலாமல் உள்ளதைக் களைந்து, அனைவரும் விளையாட்டில் சேர ஊக்குவிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது...

சினிமாவில் புரட்சி  வசனம் பேசும் நடிகர்கள் - நிஜத்தில் பேசிய விஜய் சேதுபதி!!

சமுதாயத்தை திருத்துவதாக, சினிமாக்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசும் நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் மேடையையோ, சிறு மைக்கயோ கண்டால் கூட, தலைதெறிக்க ஓடுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, நிழலைக் காட்டிலும் நிஜத்தில் வெளிப்படையாகப் பேசும் விஜய் சேதுபதி, ரசிகர்களுடன் எளிமையாக பழகுவது, செல்ஃபி எடுக்க வருபவர்களுக்கு முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளிப்பது என, ரசிகர்களால் மக்கள் செல்வனாகவே கொண்டாடப்படுகிறார். ஆனால், சமீப நாட்களில் திரையரங்கம், ஓடிடி, சின்னத்திரை என எங்கு பார்த்தாலும் விஜய் சேதுபதியின் முகமே வந்ததால் சலிப்படைந்த நெட்டிசன்கள், அவரையும் கலாய்க்க தவறவில்லை. என்றாலும் கூட, தற்போதுள்ள முன்னணி நடிகர்களிலேயே, மிகவும் தெளிவாக பேசக்கூடியவர் விஜய் சேதுபதி தான் என்பதை, நெட்டிசன்களும் ஒத்துக் கொள்வதுண்டு. 

மனதில் தோன்றுவதை அப்படியே பேசுவதை வழக்கமாகக் கொண்ட விஜய் சேதுபதி, சீதக்காதி படம் வெளியீட்டு பிரச்சனை தொடர்பாக, எடக்கு மடக்காக கேள்வி கேட்ட நிருபருக்கு பதிலடி கொடுத்ததை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதேபோல், 800 படத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பிய போது, 'பிரச்சினை பண்ண வேண்டும் என்றா படம் எடுப்போம். மக்களை ரசிக்க வைக்க வேண்டும் என்றுதான் படம் எடுக்கிறோம். சர்ச்சைகள் எல்லாம் எங்களுக்குத் தேவையற்றவை’ என்று பதிலளித்தார்.

பேமிலி மேன் சீரிஸில் விஜய் சேதுபதி நடிப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், இதையெல்லாம் கேட்கும் போது “போங்கடா வெண்ணெய்களா” என்றுதான் தோன்றும் என தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார். 

விஜய் சேதுபதி தமிழர் இல்லை என ஒருசிலர் கூறிய போது, மொழி, மதம், குலதெய்வம் போன்றவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றும், அது எனக்கு தேவையில்லை என்றும் கூறி கடந்து சென்றார்.

தற்போது, விளையாட்டு மட்டுமே ஜாதி எனும் பாகுபாட்டை ஒழிக்கும் எனப் பேசியுள்ளார் விஜய் சேதுபதி. சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற, 71வது சீனியர் தேசிய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, விளையாட்டை வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்காமல், அதற்குள் உள்ள நுணுக்கங்களை வாழ்க்கையிலும் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவர், விளையாட்டு மட்டுமே ஜாதி எனும் பாகுபாட்டை ஒழிப்பதாகக் கூறினார். இன்னும் சில பள்ளிகளில் ஜாதி பிரிவினையால் மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்க இயலாமல் உள்ளதாகவும், அதனை களைந்து அனைவரும் விளையாட்டில் சேர ஊக்குவிக்க வேண்டும் எனவும் விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டார்.

சாதி மனிதனை சாக்கடையாக்கும். மதம் மனிதனை மிருகமாக்கும் என்றார் தந்தை பெரியார். ஆம், ஒரு சமுதாயத்தை பின்னோக்கி இழுத்துச்சென்று, அதளபாதாளத்தில் தள்ளுவது சாதியும், மதமுமே. அத்தகைய சாதியை பற்றி இப்போது பேசியுள்ள விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே, மதத்தின் பெயரால் மோசடி செய்பவர்களைக் கடிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற சாதி, மத வெறுப்புகள் குறித்து விஜய் சேதுபதி பேசியிருப்பது இணையவாசிகள் இடையே நம்பிக்கையை விதைத்துள்ளது.