VJ சித்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் அழிப்பு...! என்ன காரணம்...?

சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கு சில நாட்களாக சூடு பிடித்துள்ள நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள சில புகைப்படங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவை ஏன் அழிக்கப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

VJ சித்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் அழிப்பு...!  என்ன காரணம்...?

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தோன்றிய vj சித்ரா படிப்படியாக தன்னை மேம்படுத்திக்கொண்டு பல சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் தோன்றிய பிறகு தான் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. இப்படி இருக்க திடீரென சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9 ம் தேதி  நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மக்கள் மனதில் நீக்காத வடுவாக மாறியுள்ளது. மேலும் சித்ரா தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அளவிற்கு கோழை இல்லை என அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்திருந்தனர். அதனால் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் தெரிவித்து வந்தநிலையில் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ரா தற்கொலை செய்துகொள்வதற்கு அவரின் கணவர் ஹேமந்த் மற்றும் தாய் விஜயா கொடுத்த மன அழுத்தமே காரணம் என காவல் துறையினர் தெரிவித்து இருந்தனர். மேலும் அடுத்தடுத்து சித்ராவின் உறவினர்கள்,  நெருங்கிய நண்பர்கள், அவரின் உதவியாளர் என பலதரப்பினருடனும் விசாரணை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சித்ராவின் செல்போனில் உள்ள sms, போட்டோஸ், ஆடியோஸ் என அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தியத்தில், சித்ராவின் கணவர் ஹேமந்த், மதுபோதையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தகராறு செய்துள்ளதாக தெரியவந்தது. இது போன்ற தகவல்கள் சித்ராவின் பெற்றோருக்கு முன்னதாக தெரிந்த நிலையில் சித்ராவின் தாய், ஹேமந்தை விட்டு பிரிந்து வருமாறு கூறியதால், சித்ரா மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சொல்லப்பட்டது. அதனால் சித்ராவின் கணவர் ஹேமந்த் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மேலும் சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் அரசியல் பிரபலங்கள் சிலருக்கு தொடர்பிருப்பதாக அப்போதே கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக சித்ராவின் கணவர் ஹேமந்த்,  சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும்,  " `என் மனைவி சித்ரா இறந்ததும் நானும் இறந்துவிடலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், என் மனைவியைக் கொலை செய்தது நான்தான் என்று என்மீது பழி சுமத்தப்பட்டது. நான் எந்தக் குற்றமும் செய்யாதவன் என்பதை நிரூபிக்கத்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சித்ராவின் மரணத்துக்கு முன்னாள் அமைச்சர், அரசியல்வாதி, தொழிலதிபர் ஒருவர் ஆகியோர்தான் காரணம். என் மனைவியின் தற்கொலைக்குப் பின்னணியில் பெரும் பணபலமிக்க கும்பல் இருப்பது பலருக்கும் தெரியும். சித்ராவின் மரணத்துக்குக் காரணமானவர்களிடம் பணம் பறிக்க ஒரு கும்பல் முயன்றுவருகிறது. அதற்கு நான் ஒத்துழைக்கவில்லையென்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவருகிறார்கள்.

அந்தக் கும்பலுக்குப் பயந்து தற்போது எனது வழக்கறிஞர் வீட்டில் தங்கியிருக்கிறேன். சித்ராவின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் பெயர்களைச் சொன்னால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அந்த அரசியல்வாதி தரப்பு என்னை மிரட்டிவருகிறது. இரண்டு தரப்பினரிடமிருந்தும் எனக்கு ஆபத்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், என் மனைவி இறப்பதற்கு முன்பாகக் கூறிய தகவல்களை வெளியிடுவேன்." என ஹேமந்த் கூறியுள்ளார். ஹேமந்த்தின் இந்த புகார், இவர் உண்மையை தான் சொல்கிறாரா..இல்லை தன் பெயரை காப்பாற்றிக்கொள்ள இப்படி சொல்கிறாரா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. அரசியல் பிரமுகருக்கு சம்மந்தம் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் யார் அந்த அரசியல் பிரமுகர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக பெரம்பலுாரில், ஒரு நிகழ்ச்சி திறப்பு விழாவுக்கு வந்தபோது, அப்போதைய அதிமுக எம்எல்ஏ ஒருவர் செய்த டார்ச்சர்தான் காரணம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அதேபோல், புதுக்கோட்டை மாஜி எம்எல்ஏவுக்கும் தொடர்பு உள்ளதாக சொல்லப்பட்டது. இதுபற்றி பல விதமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள சில பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த புகை படங்கள் எல்லாம் எதற்காக அழிக்கப்பட்டன, ஒருவேளை சித்ரா மரணத்திற்கும் அந்த பதிவுகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அந்த பதிவுகள் இருந்தால் நாம் சிக்கிவிடுவோமோ என்ற காரணத்தினால் தான் சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி அந்த பதிவுகளை நீக்கி விட்டனர் என்று கூறி வருகின்றனர். 

மேலும் சைபர் கிரைம் போலீசார் இதில் தலையிட்டு அந்த புகைப்படங்களை மீட்டெடுத்தால் சித்ராவின் வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் எனவும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.