கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு...!

கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு...!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சன் ஷைன் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தின் டீசர், கடந்த மார்ச் 22ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் இந்த படம் வரும் 5ம் தேதி திரைக்கு வருகிறது.

எந்த ஆராய்ச்சியும் செய்யாமல், எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாமல் உண்மை சம்பவம் எனக் கூறி நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் கலவரத்தை தூண்டும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அரவிந்தாக்‌ஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், படத்தின் டீசர் காட்சியில் முதலில் தோன்றும் பெண் தனது பெயர் ஷாலினி உன்னி கிருஷ்ணன் எனவும் தற்போது பாத்திமா பா என்வும் தான் ஒரு ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதி எனவும் ஆப்கன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தன்னைப் போல் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா மற்றும் ஏமனில் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலப்படுத்தும் படம் என பிரகடனமும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த காட்சிகளின் உண்மைத்தன்மையை சரி பார்க்கும்படி, சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

பின்னர், இந்தியாவில் இருந்து எத்தனை இந்து பெண்கள் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்கு விற்கப்பட்டுள்ளனர்? அதில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்த விவரங்களை கோரிய போது இது மாநில அரசு சம்பந்தப்பட்டது என உள்துறை அமைச்சகம் பதிலளித்ததாகவும், இதிலிருந்து அரசிடம் இது சம்பந்தமாக எந்த தகவலும் இல்லை என்பது தெளிவாவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளதாகவும் முறையாக சென்சார் சான்றிதழ் இல்லாமல் இந்த டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பொய்யான தகவல்களை எந்த ஆதாரங்களும் இல்லாமல் எடுக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட அனுமதித்தால் அமைதி விரும்பும் நாடான இந்தியா பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் நாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தை வெளியிட அனுமதித்தால் இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் பொது ஒழுங்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் படத்தை வெளியிட முழு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:தன்னையே கேலி செய்தாலும், மக்களை மகிழ்வித்த மனோபாலா...!!