பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் 'ஒன் பார் யு' என, அழைக்கப்படும் பரிசு திட்டம் தீபாவளிக்கு அறிமுகமானது. இதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிக்கொள்ளும் எரிபொருள் கூப்பனை, நண்பர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கும் முறை துவங்கியது. இந்த கூப்பன், குறைந்தபட்சம் ரூ.500 முதல், அதிகபட்சம் ரூ.1,000 வரை கிடைக்கிறது.
இத்திட்டம் மக்களிடம் முழுமையாக சென்றடைய தற்போது புதிய வழிகாட்டுதலை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி உறவினர் மற்றும் நண்பர்கள் திருமணத்திற்கு பரிசளிக்க விரும்புவோர், கூப்பன்களை வழங்கலாம். அதனை பயன்படுத்தி, அவர்கள் பெட்ரோல் அல்லது டீசலை பெறலாம். இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ’’உங்கள் அன்புக்குரியவர்களின் புதிய துவக்கங்களை மிக சிறப்பானதாக மாற்றுங்கள். திருமணங்களை கொண்டாட சிறந்த பரிசாக இந்தியன் ஆயில் நிறுவன எரிபொருள் கூப்பன் உள்ளது. அவற்றை 'ஆன்லைன்' வாயிலாக பெற்று உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் அனைவருக்கும் பரிசளியுங்கள்’’ என கூறியுள்ளது.