ஹங்கேரியிலிருந்து 240 இந்தியர்களுடன் நாடு திரும்பிய 3-வது விமானம்!!

உக்ரைனில் சிக்கியிருந்த 240 இந்திய மாணவர்களுடன் ஹங்கேரியிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் மூன்றாவது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது.

ஹங்கேரியிலிருந்து 240 இந்தியர்களுடன் நாடு திரும்பிய 3-வது விமானம்!!

உக்ரைன் மீது ரஷியா கடும் ராணுவத் தாக்குதலை நடத்தி வருவதால், அங்கு பதற்றமான சூழலும் நிலையற்றத் தன்மையும் நிலவுகிறது.

தலைநகர் கீவ்வைக் கைப்பற்ற ரஷியா முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் படையினர் அதை முறியடித்து வருகின்றனர். போரில் உக்ரைனிலுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. சாலை மார்க்கமாக அருகிலுள்ள நாடுகளின் எல்லையை அடைந்தபின், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்கு ஆப்ரேஷன் கங்கா என பெயரிடப்பட்டுள்ளது. 

முதல் விமானத்தில் 219 மாணவர்கள் நேற்று மாலை இந்தியா வந்தடைந்த நிலையில், இன்று அதிகாலை இரண்டாவது விமானத்தில் 250 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

இந்த வரிசையில் தற்போது ஹங்கேரியிலிருந்து வந்துள்ள மூன்றாவது விமானத்தில் 240 இந்திய மாணவர்கள் வந்துள்ளனர். அவர்களை அமைச்சர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

இதனிடையே உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய கர்நாடகா மாணவர்களை, பெங்களூரு விமான நிலையத்தில் நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் கர்நாடகா அமைச்சர் அசோகா ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அங்கு நிலவும் தற்போதைய சூழல் குறித்தும் கேட்டறிந்தனர். 

இந்த நிலையில், உக்ரைனிலிருந்து, விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்த கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் தமிழக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.