தகவல் அளித்தால் 5 லட்சம் பரிசு.....எதைக் குறித்து?!!

தகவல் அளித்தால் 5 லட்சம் பரிசு.....எதைக் குறித்து?!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டு உறுப்பினர்களை குறித்து தகவல் அளித்தால் தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.  

பரிசு அறிவிப்பு:

பாஜக தலைவர் பிரவீன் நெட்டாருவை கொடூரமாகக் கொன்றதற்காக பரிசு அறிவிக்கப்பட்டுள்ள இருவருமே கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள்.  அவர்கள் இருவரும் கொடாஜே முகமட் ஷெரீப் மற்றும் மசூத் கேஏஎன அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.  குற்றம் சாட்டப்பட்டவர்களின் முகவரியைக் கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ தெரிவித்திருந்தது.  மேலும் தகவல் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது என்ஐஏ.

ஆதரவு தெரிவித்ததால்....:

26 ஜூலை 2022 அன்று, கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் வசிக்கும் பிரவீன் நெட்டாரு,  கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.  கர்நாடக பாஜக யுவ மோர்ச்சா மாவட்ட செயலாளராக இருந்தவர் கொலைசெய்யப்பட்ட பிரவீன்.  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக கன்ஹையலால் என்ற நபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி, பிரவீனும் கன்ஹையாலாலுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த நிலையில், இதன் காரணமாகவே பிரவீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 

நடந்தது என்ன?:

இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது பிரவீன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பிரவீனை வாள், அரிவாள், கோடாரியால் தாக்கியுள்ளனர்.  இந்தப் படுகொலைக்குப் பிறகு கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பிஎஃப்ஐ அமைப்பின் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.  

முதலமைச்சர் கண்டனம்:

இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, குற்றவாளிகளை விரைவில் பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  பின்னர் இந்த வழக்கின் விசாரணையை என்ஐஏ பொறுப்பேற்று விசாரணை நடத்தி வருகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்த கொரோனா.....யாரைக் குறிப்பிடுகிறார் கெலாட்!!!