உ.பி.யில் இன்று 61 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 5-வது கட்டமாக 61 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து செல்கின்றனர்..

உ.பி.யில் இன்று 61 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், இன்று 12 மாவட்டங்களில் உள்ள மேலும் 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில், அயோத்தி, அலஹாபாத், அமேதி உள்ளிட்ட தொகுதிகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று நடைபெறும் தேர்தலில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிரத்து தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மீதம் உள்ள 111 தொகுதிகளில் அடுத்த இரண்டு கட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 685 பேர் போட்டியிடும் இந்த தேர்தலில் முதல்முறையாக அதிக எண்ணிக்கையில் 90 பெண்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேசத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ம் தேதி நடக்க உள்ளது. அதன்பின் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள், ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 8 புள்ளி பூஜ்ஜியம் 2 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.