மணிப்பூர்: கனமழை காரணமாக நிலச்சரிவு.. ராணுவ வீரர்கள் உட்பட 81 பேர் பலி!!

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 81 பேர் உயிரிழந்தனர்.

மணிப்பூர்: கனமழை காரணமாக நிலச்சரிவு..  ராணுவ வீரர்கள் உட்பட 81 பேர் பலி!!

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டம், துபுல் ரயில் நிலையம் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து இந்திய ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் உள்ளிட்டோர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, காணாமல் போன 12 பிராந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 26 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நோனி நிலச்சரிவு மிக மோசமான சம்பவம் எனவும், ராணுவ வீரர்கள் உட்பட 81 பேரின் உயிரை இழந்துள்ளோம் எனவும் மணிப்பூர் முதலமைச்சர் என். பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், மீட்பு பணி இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் கூறினார். தொடர்ந்து இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என மணிப்பூர் முதல்வர் அறிவித்துள்ளார்.