பீகார்: சூடு பிடித்த அரசியல் களம்.. பாஜகவுக்கு பின்னடைவா? மீண்டும் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்..!

நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி இருவரும் கூட்டாக இணைந்து ஆட்சியமைக்க, ஆளுநரிடம் உரிமை..!

பீகார்: சூடு பிடித்த அரசியல் களம்.. பாஜகவுக்கு பின்னடைவா? மீண்டும் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்..!

பீகாரில் பாஜகவின் கூட்டணியை முறித்து கொண்ட ஐக்கிய ஜனதா தளக்கட்சி தலைவர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைக்கிறார். முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வியும் இன்று பதவியேற்கின்றனர். 

நிதிஷ்குமார் ராஜினாமா: பீகாரில் கடந்த சில மாதங்களாகவே முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும், அதன் கூட்டணி கட்சியாக இருந்த பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. நிதிஷ்குமாரை முதலமைச்சர் பதவியில் இருந்து விலக்க, பாஜக திரைமறைவில் பணியாற்றி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், தனது கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்திய நிதிஷ்குமார், பாஜகவுடனான கூட்டணியில்  இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

164 எம்.எல்.ஏக்கள் ஆதரவு: இதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வியை, நிதிஷ்குமார் சந்தித்தார். அவருக்கு பூங்கொடுத்து கொடுத்து தேஜஸ்வி வரவேற்றார். அப்போது தனது கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை நிதிஷ்குமாரிடம், தேஜஸ்வி வழங்கினார். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிதிஷூக்கு ஆதரவு தெரிவித்தன. கூட்டணியின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி இருவரும் கூட்டாக இணைந்து ஆட்சியமைக்க, ஆளுநரிடம் உரிமை கோரினர். 164 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக நிதிஷ்குமார் தெரிவித்தார். 

ராஷ்டிரிய ஜனதா தளம் 79 இடங்கள்: இந்த நிலையில், பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வியும் இன்று பதவியேற்கின்றனர். இருவருக்கும் ஆளுநர்  பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகளை உடைய பீகாரில், ராஷ்டிரிய ஜனதா தளம் 79 இடங்களிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் பலம் வகிக்கிறது.