10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு :  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. 

10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு :  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம் 10 சதவிகித இட ஒதுக்கீடு வரம்புக்குள் வரக்கூடியவர்கள் ஆண்டு வருமானம் 8 லட்சமாக நிர்ணயித்தது ஏன்? பிற வரைமுறைகளை எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது என்ற கேள்விகளை எழுப்பியதோடு மத்திய அரசுக்கு நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் வரை இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுகளையும் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது.

இதற்கிடையே டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். விடுமுறைக்குப் பிறகு இன்று முதல் அலுவல்கள் தொடங்கியவுடன் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்குகளை நாளைய தினமே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க கூடிய வழக்கு என்பதனால் உடனடியாக விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து விட்டு நாளை அல்லது நாளை மறுநாள் இந்த வழக்கை விசாரிப்பது சம்பந்தமாக முடிவெடுக்கப்படும் என நீதிபதி சந்திரசூட் அறிவித்தார்.