தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு :  விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் - உச்சநீதிமன்றம்!!

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு :  விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் - உச்சநீதிமன்றம்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனு மற்றும் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த நவம்பரில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆலையில் உள்ள உயர் ரக இயந்திரங்கள்,  உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலை உருவாகியுள்ளதால், பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில் பின்னர் விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. வேதாந்தா நிறுவனம் தரப்பில், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டதால், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதனையடுத்து நீதிபதி,  ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரதான வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார்.