தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் - பிரதமர் ஆலோசனை!

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் - பிரதமர் ஆலோசனை!

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், பிரதமரின் ஆலோசகர், யுஜிசி தலைவர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 

அப்போது, பள்ளிக் குழந்தைகள் அதிகப்படியான தொழில்நுட்ப வெளிப்பாட்டைத் தவிர்க்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டு முறைகளில் கற்றல் முறை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.  

படிப்பை பாதியில் நிறுத்திய பள்ளிக் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது,  உயர் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டிருப்பது உள்ளிட்டவை நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்து, தேசிய வழிகாட்டுதல் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.